புலம்பெயர்ந்து இருநூறு ஆண்டுகளோ, இருபதாண்டுகளோ அவர்கள் மூலமாகத் தமிழ் வாசகனுக்கு நேரடியாகத் தெரியவரும் அந்நிய மண்ணின் மரபுகள் உண்மையான அனுபவங்களாகின்றன. ஐரோப்பிய, அமெரிக்க, கனடா, வளைகுடா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் பண்பாடுகளை நேரடியான தமிழ் எழுத்தாளர் அனுபவமாகவே நமக்கு இன்று வாசிக்க இயலும். ஆனால் சீனா, ஜப்பான், கொரியா போன்ற நிலப்பரப்புகளின் ஆக்கங்களை மொழிபெயர்ப்பு மூலமாகவே இதுவரை அறிந்த்து வந்தோம். ஆனால் அண்மைக்கால அனுபவம் வேறு. அந்த வகையில் ‘இசூமியின் நறுமணம்’ எனும் இந்தத் தொகுப்பின் எட்டு கதைகள் மூலம் ஜப்பானியப் பண்புகளைப் படைத்துக்காட்ட முயலும் ரா.செந்தில்குமாரின் முயற்சி பாராட்டுதலுக்குரியது, வரவேற்கத் தகுந்தது. - நாஞ்சில் நாடன் சூமியின் நறுமணம் தொகுப்பில் பனிரெண்டு சிறுகதைகள் உள்ளன. அதில் எட்டு கதைகள் ஜப்பானிய பின்புலத்தை வைத்து எழுதபட்டவை. மீதமுள்ள நான்கும் நம் மண் சார்ந்து எழுதபட்டது. ஆனால் இந்த அனைத்து கதைகளிலும் மனித மனவிகாரங்களும் குரோதங்களும் ஏக்கங்களும் ஏமாற்ற தோல்விநிலைகளும் மரணம் சார்ந்த கையறுநிலைகளும் படம்பிடித்து காட்டப்பட்டுள்ளன. - விஜயராகவன்